×

நடு வழியில் திடீர் பிரேக் டவுன்; 3 மணிநேரம் போக்குவரத்தை திணறடித்த அரசு பஸ்: மார்த்தாண்டம் ஜங்சன் பகுதியில் அணிவகுத்த வாகனங்கள்

மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் ஜங்சன் சாலையில் திடீரென அரசு பஸ் பிரேக் டவுனாகி நின்றதால் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குழித்துறையில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை ரூ.222 கோடியில் 2.5 கிலோமீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் ஒன்று உள்ளது. இதற்கிடையே பம்பத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பாலத்தில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டதால் பாலம் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பாலம் கடுமையாக சேதமடைந்துள்ளதால் அந்த வழியாக பல இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள அணுகு சாலை வழியாக சென்று வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்தநிலையில் நேற்று தேங்காப்பட்டணத்தில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பஸ் ஒன்று இரவு சுமார் 7.30 மணியளவில் மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக ஜங்சன் பகுதிக்கு வந்தது. அப்போது திடீரென பிரேக் டவுன் ஆகி நடுவழியில் நின்றது.

ஏற்கனவே அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்த நிலையில், அரசு பஸ் திடீரென நின்றதால் அதன் பின்னால் அவசர ஊர்தியான ஆம்புலன்ஸ் உள்பட ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் எரிச்சலடைந்தனர். உடனே மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பழுதான பஸ்சை இயக்க எவ்வளவோ முயற்சி செய்தாலும் பலனில்லை. அந்த பஸ்சில் இருந்த பயணிகள் இறங்கிசென்று வேறு பஸ் மூலம் புறப்பட்டு சென்றுவிட்டனர்.

திருவனந்தபுரம், மார்த்தாண்டம் பகுதியில் இருந்து வந்த ஆம்னி பஸ்கள், அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும் குழித்துறை மற்றும் வெட்டுவெந்நி முதல் சென்னித்தோட்டம் வழியாக திருப்பி விடப்பட்டன. இதையடுத்து மார்த்தாண்டம் டெப்போவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு பழுதான வாகனங்களை தூக்கியபடி மீட்டு செல்லும் மீட்பு வாகனம் இருப்பு இல்லை. இதனால் அங்கிருந்து பணியாளர்கள் சிலர் புறப்பட்டு வந்தனர். அவர்கள் அரசு பஸ்சில் ஏற்பட்ட பழுதை சரிபார்க்க தொடங்கினர். அந்த பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் திடீரென ஜாம் ஆகியதே பழுதுக்கு காரணம் என்பதை கண்டுபிடித்தனர்.

பழுது நீக்கிய பிரகு அந்த பஸ் இரவு 9.30 மணியளவில் அங்கிருந்து பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே மார்த்தாண்டம் மேம்பாலத்தை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நடு வழியில் திடீர் பிரேக் டவுன்; 3 மணிநேரம் போக்குவரத்தை திணறடித்த அரசு பஸ்: மார்த்தாண்டம் ஜங்சன் பகுதியில் அணிவகுத்த வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Marthandam Junction ,Marthandam ,Marthandam Junction Road ,Kulithurai ,Marthandam Bhammam ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர்...